
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வயதானவர்களுக்கு இல்லம் தேடி ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அகவை முதிர்ந்த முதியோருக்கு இல்லம் தேடி ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, கொடைக்கானல் மலைப்பகுதிகளில், இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கான முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டது.
கொடைக்கானல் பண்டகசாலைக்கு உட்பட்ட 26 கடைகளில் 9 கடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தனி வாகனம் மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகிய பொருட்கள் முதியோரின் இல்லத்துக்கே சென்று வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
இதனால் வயதானவர்கள் ரேசன் கடைகளுக்குச் சென்று காத்திருந்து அங்கிருந்து பொருட்களைச் சுமந்து செல்லும் நிலை மாறியுள்ளதால் இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
