பள்ளி சிறுமியைக் கடத்தி 10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த கும்பலைப் போலீசார் தேடிவருகின்றனர்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் ஒயூர் பகுதியைச் சேர்ந்த 6 வயது பள்ளிச்சிறுமி அபிஹல் சாரா ரிஜி. இந்தச் சிறுமி நேற்று மாலை 5 மணியளவில் தனது சகோதரன் ஜானதன் உடன் டியூசன் வகுப்புக்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது, இருவரையும் பின்தொடர்ந்து சென்ற கும்பல் சிறுமி சாராவை காரில் கடத்தி சென்றது. பின்னர், சிறுமியின் தாயாருக்கு போன் செய்த அந்தக் கும்பல் உங்கள் மகளைக் கடத்திவிட்டதாகவும், சிறுமியை விடுதலை செய்ய ரூ. 5 லட்சம் கொடுக்கும்படியும் கூறியுள்ளது. மேலும், போலீசாருக்கு தகவல் கொடுத்தால் விபரீதம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைக் கேட்ட சிறுமியின் பெற்றோர் செய்வதறியாது திகைத்துள்ளனர். பின்னர், மீண்டும் போன் செய்த அந்தக் கும்பல் சிறுமியை விடுதலை செய்ய ரூ. 10 லட்சம் தரும்படி மிரட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாகப் போலீசில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை மீட்க மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சிசிடிவி கேமரா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த போலீசார், சிறுமி மருதனப்பள்ளி பகுதியில் வெள்ளை நிற காரில் கடத்தப்பட்டதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி கடத்தல் சம்பவத்தில் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு உள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 20 மணி நேரத்துக்குப் பிறகு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். இன்று மதியம் கொல்லத்தில் உள்ள பொது மைதானத்தில் சிறுமி தனியாக அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று, தனியாக இருந்த சிறுமியை மீட்டனர். கடத்தல்காரர்கள், சிறுமியை அந்த இடத்தில் விட்டுச் சென்றுள்ளனர். அவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
