Kerala : 7 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு..!

Advertisements

கேரளத்தின் தென்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் செவ்வாயன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி இறுதிக்கட்டப் பரப்புரை நடைபெற்றதால் திருவனந்தபுரத்தில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

கேரளத்தில் 14 மாவட்டங்களிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என 1199 உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.

முதற்கட்டமாக டிசம்பர் 9ஆம் நாள் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டை, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

இரண்டாம் கட்டமாக டிசம்பர் 11ஆம் நாள் திருச்சூர், பாலக்காடு, மலைப்புறம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தென்கேரளத்தின் 7 மாவட்டங்களில் ஞாயிறு மாலையுடன் பரப்புரை ஓய்ந்தது. இதனால் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், சுதந்திரமாகப் போட்டியிடும் வேட்பாளர்களும் அனல்பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டனர்.

திருவனந்தபுரம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பாப்பனங்கோடு சந்திப்பில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக அரசியல் கட்சியினர் ஒரே இடத்தில் கூடி இறுதிக்கட்டப் பரப்புரையில் ஈடுபட்டனர்.

இதனால் அந்தச் சாலையில் பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நோயாளிகளைக் கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் காவல்துறையினருக்கும் அரசியல் கட்சியனருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்துத் தேசிய நெடுஞ்சாலையில் பரப்புரையில் ஈடுபட்ட அரசியல் கட்சியினரைக் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *