Kaveri River Issue: நீதிமன்றம் சென்ற தமிழகம்… சம்மதம் தெரிவித்த கர்நாடகம்!

Kaveri River Issue | D. K. Shivakumar

தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட முடிவு செய்துள்ளதாகக் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்…

பெங்களூரு: தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு முறைப்படி தரவேண்டிய தண்ணீரை தரவில்லை. இதுதொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு தினமும் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறக்கக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். செப்டம்பர் மாதம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய 36.76 டிஎம்சி தண்ணீரையும் திறக்கக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று காலைக் காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றியபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாக அவர் கூறினார்.

மேலும் கடந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக இருந்ததாகவும், சுமார் 400 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில் கலந்ததாகவும் தெரிவித்த அவர், மேகதாது அணை இருந்திருந்தால் தமிழகம் எதிர்பார்க்கும் தண்ணீரை திறந்து விட்டிருக்க முடியும் என்று தெரிவித்தார். எனவே மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *