
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக வடக்கு மண்டல் ஐ . ஜி . அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் கரூர் விரைந்து விசாரணையை மேற்கொள்ளவுள்ளது.
கரூர் மாவட்டம், வேலுச்சாமி புரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு வயது குழந்தை உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் மத்திய மாநகர செயலாளர் மாசி பவுன்ராஜ் உள்ளிட்ட மூன்று பேரை கரூர் நகர போலீசார் கைது செய்தனர்.
மேலும், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், இருவரும் தலைமறைவாகினர்.
மேலும், கைது நடவடிக்கையில் இருந்து தற்காத்து கொள்வதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் 8 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக வெற்றிக் கழகத்தக்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது.
மேலும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு வடக்கு மண்டல ஐ ஜி அஸ்ரா கார்க் தலைமையில், நாமக்கல் மாவட்ட எஸ் பிக்கள் விமலா, சியாமளா, தேவி, ஏ டி எஸ் பி க்கள் உள்ளிட்டோரை சிறப்பு புலனாய்வு குழுவாக அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பான ஆவணங்கள் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க பட்டிருந்தன.
இந்த நிலையில், வடக்கு மண்டல ஐ ஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொள்வதற்காக இன்று கரூருக்கு செல்கிறது.
கரூர் கொடூந்துயரம் சம்பவம் நடைபெற்ற வேலுசாமிபுரம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளது.
இந்த அதிரடியான விசாரணையில் கூட்ட நெரிசலுக்கான காரணம், இதில், கட்சிகளின் உள் நோக்கம் ஏதும் உள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து அதற்கான அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது.
அதன் அடிப்படையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது. இந்தச் சம்பவத்தில் ஏற்கனவே, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்திருந்தது.
அந்த ஒரு நபர் ஆணையமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது.
இதுமட்டுமின்றி, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல். முருகன், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம் பிக்கள் 8 பேர் மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் ஆகியோர் ஏற்கெனவே சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தியது.
முன்னதாக, கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர் மாற்றப்பட்டு டிஎஸ்பி பிரேம் ஆனந்தன் நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். கரூரில் விஜய் பரப்புரை வாகனம் மீது விஜய் ஏறுவதற்கு முன்பே பலர் மயக்கம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பான அதிர்ச்சி காணொளிகள் தற்பொழுது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வேலுச்சாமி புரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி சனிக்கிழமை அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது.



