Kanniyakumari: காதலி வீட்டு முன் தீக்குளித்த வாலிபர்!

குமரியில் காதலி வீட்டு முன்பு தீக்குளித்த வாலிபருக்குக் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொல்லங்கோடு: கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள ஆற்றுப்புறம் பகுதியில் நேற்று மாலையில் 25 வயதுடைய ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் தான் கொண்டு வந்த பெட்ரோல் கேனை எடுத்துத் தன்மீது பெட்ரோலை ஊற்றித் திடீரெனத் தீயை பற்ற வைத்தார். இதனால் உடல் முழுவதும் தீப்பரவிய நிலையில் அவர் வலியால் அலறித் துடித்தார்.

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து வாலிபர்மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி அவர் உடல் முழுவதும் கருகின. இதையடுத்து அவரைப் பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குக் கவலைக்கிடமான நிலையில் வாலிபருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தகவல் அறிந்த நித்திரவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர் புதுக்கடை பகுதியைச் சேர்ந்த முகேஷ் (வயது 25) என்பது தெரிய வந்தது. இவர் ஆற்றுப்புறம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இந்தக் காதல் விவகாரம் தொடர்பாக இளம்பெண்ணின் வீட்டின் முன் தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்றதாகப் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் வாலிபர் பெட்ரோல் கேனுடன் மோட்டார் சைக்கிளில் வரும் கண்காணிப்பு கேமரா காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *