மறைந்த தலைவர்களை இழிவுபடுத்திப் பேசுவது திமுகவிற்குப் புதிதில்லை

கர்மவீரர் காமராஜரைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக-வினருக்குத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவது, அவர்களது மேன்மையை இழிவுபடுத்திப் பேசுவது திமுகவிற்குப் புதிதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கர்மவீரர் காமராஜரைக் குறைத்துப் பேசியிருப்பது, அதுவும் வரலாற்றுத் திரிபைச் செய்திருப்பது வருந்தத்தக்கதும் கண்டிக்கத்தக்கதும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தன் மறைவுக்கு முன்பு கருணாநிதியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு ஜனநாயகத்தைக் காக்க வேண்டுமென்று காமராஜர் கேட்டதாகத் திருச்சி சிவா பொய்யுரைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மின் வெட்டினைக் கண்டித்தும் திமுக அரசின் அவலத்தை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய காமராஜர் ஏசி இல்லாமல் இருக்கமாட்டார் என்றும் அவருடைய தங்கும் விடுதி உட்பட அனைத்து இடங்களிலும் குளிர்சாதன வசதி செய்தவர் கருணாநிதி என்றும் திருச்சி சிவா பேசியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏழை எளிய மக்களின் வாழ்வு மேம்பட உழைத்த ஒப்பற்ற மனிதரான காமராஜர் சுகவாழ்வு வாழ்ந்தார் என்பது போல உள்நோக்கம் கொண்டு திருச்சி சிவா பேசியிருப்பது உண்மையிலேயே பேரதிர்ச்சியாக உள்ளதாக நாகேந்திரன் தெரிவித்துள்ளார். .
எமர்ஜென்சியின் போது காமராஜரைக் கைது செய்யக் கங்கணம் கட்டிக் கொண்டிருந்த இந்திரா காந்தியிடமிருந்து திமுக அரசு தான் அவரைக் காத்தது என்று திருச்சி சிவா பேசியதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்துச் சிறை சென்ற காமராஜரை இந்திரா காந்தியிடமிருந்து காத்தோமென திமுக சொல்வதெல்லாம் நகைப்புக்குரியது என்றும் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
கர்மவீரர் காமராஜரைக் கொச்சைப்படுத்திப் பேசியதற்கு திருச்சி சிவா அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *