
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து விழுப்புரம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவையும் சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இவர் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் கோர்ட்டு கடந்த 2016ம் ஆண்டு, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை வழக்கில் இருந்து விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 2016ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி வருமானத்திற்கு அதிகமாக 64.90 சதவிகிதம் சொத்துக்குவித்தது நிரூபணமாகியுள்ளதாக சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக தெரிவித்துள்ளது. மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து விழுப்புரம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவையும் சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் வரும் 21ம் தேதி காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அன்றைய தினம் பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் அல்லது காணொலி வாயிலாக ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

