
திண்டுக்கல் அருகே காதலர்களைக் கட்டிப்போட்டு விட்டு, 19 மற்றும் 17 வயதுடைய அக்கா மற்றும் தங்கையைக் கத்தியைக் காட்டி மிரட்டிக் கற்பழித்த 3 பேரைச் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தப்பி ஓடிய இளைஞரைத் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 19,17 மற்றும் 13 வயதில் 3 மகள்கள் உள்ளனர். இதில் 19 வயது இளம்பெண்ணுக்குத் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறு பாடால் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அந்த 19 மற்றும் 17 வயது சகோதரிகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. 19 மற்றும் 17 வயதுடைய சகோதரிகள் இருவரும் தங்களது காதலர்களுடன் கடந்த மார்ச் 30, இடையகோட்டையில் நடந்த ஒரு கோவில் திருவிழாவுக்குச் சென்றனர். மீண்டும் வீடு திரும்பியபோது அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டுச் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர்.
அந்தச் சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரண்குமார் 21, முத்தழகுபட்டியைச் சேர்ந்த வினோத்குமார் 26, முருகபவனத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் 22 ஆகிய 3 பேரும் அந்த இளம் பெண்களிடம் எதற்காக இங்கு வந்தீர்கள்? யாருடன் வந்தீர்கள் எனக் கேட்டுள்ளனர். ஓட்டலில் சாப்பிட்ட பில் தொகையைக் கொடுத்து விட்டு வெளியே வந்த காதலர்கள் அவர்களிடம் தங்களுடன் வந்ததாகக் கூறியுள்ளனர்.
பின்னர் அவர்கள் 3 பேரும் சுள்ளான் என்ற பிரசன்ன குமார் 25, என்பவருக்குப் போன் செய்து 2 இளம் பெண்கள் சிக்கியுள்ளனர், அவர்களைக் கத்தி முனையில் மிரட்டி அழைத்து வருகிறேன் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து காதலர்கள் 2 பேரையும் ஒரு பைக்கில் ஏற்றிக் கொண்டு, சிறுமிகள் 2 பேரையும் மற்றொரு பைக்கில் ஏற்றிக் கொண்டு திண்டுக்கல் தாமரைக்குளம் பகுதிக்கு வந்துள்ளனர்.
அங்கு வந்தவுடன் காதலர்கள் இருவரையும் கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டு, அந்த இடத்துக்குப் பிரசன்ன குமாரும் வந்து விடவே 4 வாலிபர்களும் சேர்ந்து 2 இளம் பெண்களையும் இரவு முழுவதும் கற்பழித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சரண்குமார், வினோத்குமார், சூரியபிரகாஷ் ஆகிய 3 பேரைக் கைது செய்த போலீசார் தப்பி ஓடிய பிரசன்ன குமாரை தேடி வருகின்றனர். பிரசன்ன குமார் மற்றும் சரண்குமார் மீது திண்டுக்கல் தாலுகா, மேற்கு தாடிக்கொம்பு, வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை. கொள்ளை, வழிப்பறி, அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 3 பேர்மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்ட 3 பேரும் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து சுத்தி, மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

