K. N. Nehru: கடந்த ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் தொடரும்!

Advertisements

சேலத்தில் கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட நல்ல திட்டங்களை திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக மாநில நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடப்பு கல்வியாண்டில் 181 பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் 26,199 மாணவ மாணவிகளுக்கு ரூ.12.63 கோடியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள சிறுமலர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் 10 பள்ளிகளை சேர்ந்த 1,232 மாணவர்கள், 1410 மாணவிகள் என 2,642 மாணவ மாணவிகளுக்கு ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே‌.என்‌.நேரு வழங்கினார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே என் நேரு,இன்றைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 1989 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அன்றைய முதல்வர் கலைஞர் மாணவ மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் திட்டத்தை தொடங்கினார்.

மாணவ மாணவியர் உரிய நேரத்தில் தங்களது இருப்பிடத்திலிருந்து பள்ளிகளுக்கு வரும் வகையில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அன்றைக்கு போக்குவரத்து அமைச்சராக இருந்த எனக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். அப்போது முதற்கொண்டு திமுக ஆட்சியில் பள்ளி மாணவ மாணவியருக்கு சிறப்பு திட்டங்கள்,பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

எங்களை தொடர்ந்து வந்த ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்காக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்றாலும் அதை நல்ல திட்டம் என்பதால் திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது ஆனால் திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தும் நல்ல திட்டங்களை மற்ற ஆட்சியாளர்கள் தொடர்ந்து செய்வார்களா என்றால் அது கேள்விக்குறிதான்.

பள்ளி மாணவர்கள்,அரசு அதிகாரிகள் போன்ற படித்து முன்னுக்கு வந்தவர்களை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு கல்வி பயில வேண்டும். சைக்கிளைப் பெற்றுச் செல்லும் மாணவர்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *