
கரூரில் என்ன நடக்கும் எனப் பயந்து அண்ணாமலை கோவைக்குச் சென்றாரோ அதே தான் அங்கும் நடக்கும் எனத் தெரிவித்த ஜோதிமணி, தமிழ்நாட்டில் மக்கள் நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிராகக் கொலை வெறியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. வீதி, வீதியாகச் சென்று வேட்பாளர்களும் வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர். இந்தநிலையில் கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவை பொருட்டாக ஏன் நினைக்க வேண்டும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கரூர் நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்தவர்,
பாஜக மற்றும் மோடி ஆட்சி ஆகா.! ஓகோவென இருக்கிறது, தமிழ்நாடு மக்களுக்கு, கரூர் மக்களுக்கு ஏதாவது செய்திருந்தால் சொந்த தொகுதியில் அண்ணாமலை நிற்க வேண்டியது தானே, இங்குத் தான் அரவங்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டார். எதற்குக் கோவைக்கு அண்ணாமலை ஓடுகிறார். கரூரில் வெல்ல முடியாது என அவருக்கே தெரியுது. அதனால் தான் கோவைக்குச் செல்கிறார்.
பாஜகவை ஒரு பொருட்டாகவே நாம் நினைக்க வேண்டாம். கோவைக்கு அண்ணாமலை சென்றுள்ளார். கரூரில் என்ன நடக்கும் எனப் பயந்து கோவைக்குச் சென்றாரோ அதே தான் அங்கும் நடக்கும். தமிழ்நாட்டில் மக்கள் நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிராகக் கொலை வெறியாக உள்ளனர். மக்கள் கண்ணீரிலும், தண்ணீரிலும் உள்ளனர். மக்கள் கஷ்டப்படுகிறார்கள் எங்களது வரிப்பணம் கொடுங்கள் எனக் கேட்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்,
ஆனால் ஒரு பைசா கூட வரவில்லை. பிரதமர் வந்தாரா வரவில்லை. இப்போது ஏன் 5 முறை தமிழகம் வருகிறார். ஏன் வருகிறார் என்றால் பாஜக தேர்தலைச் சந்திக்கிறது அதனால் வருகிறார். தமிழ்நாட்டு மக்கள் கஷ்டப்படும்போது வராத பிரதமர் இப்போ ஏன் வருகிறார். 100 முறை தமிழகத்திற்கு மோடி வந்தாலும் ஒன்றும் நடக்காது என ஜோதிமணி ஆவேசமாகத் தெரிவித்தார்.


