
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண் ஹீரோவாக நடித்துள்ள ஜோசுவா இமைபோல் காக்க திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
காதல் படங்கள் என்றாலே கவுதம் மேனன் தானெனச் சொல்லும் அளவுக்கு, மின்னலே, காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் எனப் பல்வேறு மாஸ்டர் பீஸ் படங்களைக் கொடுத்துள்ளார். இதையடுத்து ஆக்ஷன் மோடுக்கு மாறிய அவர் என்னை அறிந்தால், எனை நோக்கிப் பாயும் தோட்டா போன்ற அதிரடி ஆக்ஷன் திரைப்படங்களை இயக்கினார். படு பிசியான இயக்குனராக வலம் வந்த கவுதம் மேனன் ஒரு கட்டத்தில் முழுநேர நடிகராக மாறினார்.
அதற்குக் காரணம் அவர் இயக்கத்தில் உருவாகி கிடப்பில் போடப்பட்ட துருவ நட்சத்திரம், ஜோசுவா ஆகிய படங்கள் தான். இதில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் உடன் ராதிகா சரத்குமார், டிடி, ரித்து வர்மா, விநாயகன், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட துருவ நட்சத்திரம் திரைப்படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இன்னும் ரிலீஸ் செய்ய முடியாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. சமீபத்தில் அதனை ரிலீஸ் செய்ய எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால், தற்போது அப்படத்தை ஓரங்கட்டிவைத்துவிட்டு, தன்னுடைய மற்றொரு படமான ஜோசுவாவை ரிலீஸ் செய்யும் பணிகளில் இறங்கி இருக்கிறார் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்.
அதன்படி, ஜோசுவா திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் வருண் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஹே நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டில் வென்ற நடிகர் ஆரவ்வின் மனைவி ஆவார். கார்த்திக் இசையமைத்துள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து உள்ளார்.

