தமிழகத்தில் தனித்து விடப்பட்ட ஒரு அரசியல்வாதியாக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் மாறி விட்டார். தனது அரசியல் வாழ்க்கையில் இப்படி, ஒரு சூழ்நிலை வருமென்றே அவர் நினைத்து பார்த்திருக்க மாட்டார். முதல்வர் ஜெயலலிதாவின் மறைவும் பன்னீர்செல்வம் எடுத்த தவறான முடிவுகளும் அவரின் அரசியல் வாழ்க்கையையே சூனியமாக்கி விட்டது.
தமிழ்நாடு முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அதிகாரம் மிக்கவராக வலம் வந்தவர். ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் . கட்சியின் பொருளாளராக கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பணியாற்றியவர். முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், நிதி அமைச்சராகவும் பணியாற்றியவர்.
ஜெயலலிதா சிறை செல்ல நேர்ந்த போதெல்லாம் அவரது இடத்தில் முதலமைச்சராக இருந்து ஆட்சியை நடத்தியவர். இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரராக இருந்தாலும் தற்போது அவரது அரசியல் அஸ்தமனமாக தொடங்கியுள்ளது. பன்னீர்செல்வதுக்கு தமிழக அரசியலில் இப்போதுள்ள ஒரே வாய்ப்பு திமுகவில் இணைவதுதான்.
அதிமுக பரம்பரையில் இருந்து வந்த அவரால் அவ்வளவு எளிதில் திமுகவில் இணைந்து விட முடியாது. அதனால், மன சஞ்சலத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார் என்று கூறுகிறார்கள். ஆனாலும், அவர் மனதில் திமுகவிடம் போய்விடலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.
இல்லையென்றால், முதல்வரை வீட்டில் போய் சந்தித்திருக்க மாட்டார். தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறையிலேயே அமைச்சர் சேகர் பாபுவுடன் பேசியிருக்கவும் மாட்டார். பன்னீர் வைக்கும் கோரிக்கைகளை திமுக ஏற்றுக் கொண்டாலும் , திமுகவுடன் சேர்வதில் அவருக்கு பல தடைகள் உள்ளன.
ஏனென்றால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் பரம பக்தர் அவர். சட்டை பையில் எப்போதும், ஜெயலலிதா படம் இருக்கும். ஜெயலலிதாவின் ஆசியால்தான். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் என்ற அங்கீகாரமும் அவருக்கு கிடைத்தது. பரதன் எப்படி ராமரின் பாதுகையை வைத்து எப்படி ஆட்சி நடத்தினாரோ, அதே போல ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்து ஆட்சி நடத்தியவர்.
ஜெயலலிதாவின் அப்பழுக்கற்ற நம்பிக்கையை பெற்றவர். அதோடு, தான் இறந்தால் தனது உடல் மீது அதிமுக கொடி போர்த்திதான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டுமென்று தனது உறவுகளிடத்தில் பன்னீர்செல்வம் அடிக்க கூறி வருவார். அப்படிப்பட்ட மனநிலை கொண்ட ஒருவரால், திமுக பக்கம் அவ்வளவு எளிதில் போய் விட முடியாது.
ஒன்றிணைந்து பணியும் செய்து விட முடியாது. செங்கோட்டையன் போல சட்டென்று உணர்ச்சிசப்பட்டு த.வெ.க பக்கமும் அவரால் சென்று விட முடியவில்லை. இதனால் , தமிழக வெற்றி கழகத்தில் இணையுமாறு செங்கோட்டையன் விடுத்த அழைப்பையும், அவர் இதுவரை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளவில்லை.தனிக்கட்சி தொடங்கினாலும், வயோதிகம் காரணமாக அதற்கான சூழலும் இல்லை.
சுற்றிலும் இருந்த கொஞ்சம் நஞ்ச தொண்டர்களையும் காணவில்லை. கடந்த பொது தேர்தலில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டு 3 லட்சத்து 42 ஆயிரம் வாக்குகளை பன்னீர்செல்வம் பெற்றார். இந்த ஓட்டுகள் எல்லாம் சாதி ஓட்டுகள் என்றாலும் அதிமுக மீது அபிமானம் கொண்டு விழுந்த வாக்குகள்.
இவர், திமுகவில் சேர்ந்தால் இந்த ஓட்டுகள் விழுமா? என்கிற சந்தேகமும் உள்ளது. திமுகவில் சேர முடிவெடுத்தால் , பன்னீரை எடப்பாடி கடுமையாக விமர்சிப்பார். ‘துரோகி ‘ என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் அவரை நோக்கி வீசப்படும். அதேவேளையில், டி.டிவி. தினகரனும் எடப்பாடியும் இப்போதும் சமரசமாகி விட்டதால், மீண்டும் டி.டி.வி வழியாக பன்னீருக்கு ஆதரவாக பேச வைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக எடப்பாடியிடம் டி.டி.வி பன்னீருக்கு ஆதரவாக பேசவும் வாய்ப்புள்ளது. முதலில், பன்னீர்செல்வம் அதிமுக கட்சிக்குள் எந்த பதவியும் வேண்டாம் என்று கூறி வந்தார். ஆனால், இப்போது தனக்கு முன்பு இருந்தது போல ஒருங்கிணைப்பாளர் பதவி , வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவி வேண்டுமென்றும் பன்னீர்செல்வம் கேட்பதாக தகவல் உள்ளது.
இதனால், எடப்பாடி தரப்பு இந்த விஷயத்தில் ரொம்பவே யோசிப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால், இரட்டை இலை சின்னத்தை தடை செய்ய அவர் எடுக்க நீதிமன்ற நடவடிக்கைகள், தாங்கள் கோயிலாக கருதும் அதிமுக தலைமை அலுவலகத்தை தாக்க துணை போனது போன்ற சம்பவங்களால் மீண்டும் அத்தகைய பதவியை கொடுக்க எடப்பாடி தயங்குகிறார் என்றும் கூறுகிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான , முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது, டெல்டா மாவட்டங்களில் திமுகவின் செல்வாக்கை அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல, ஆலங்குளம் தொகுதியில் மனோஜ்பாண்டியனும் திமுக பக்கம் சாய்ந்துள்ளார். இவர்கள், இருவருமே சிறந்த களப்பணியாளர்கள்.
ஆனால், திமுக சார்பில் நடத்தப்பட்ட உள்கட்சிச் சர்வேகளில், அதிமுக ஆதரவு ஓட்டுகள் திமுகவுக்கு பெரிய அளவில் வர வாய்ப்பில்லை என்றே கூறுகிறார்கள். இதனால், பன்னீர்செல்வத்தை திமுக கூட்டணியில் சேர்ப்பது தேர்தல் ரீதியாக லாபமா, அல்லது தேவையற்ற சுமையா என்கிற குழப்பத்தில் திமுக தலைமை தடுமாறி வருகிறது.
தென் மாவட்டங்களில் தற்போது அவருக்கு எவ்வளவு உண்மையான ஆதரவு உள்ளது என்பதை அறிய, களத் தகவல்களை தீவிரமாக சேகரித்து வருகிறது திமுக. இதன் அடிப்படையில் தான், ஓ.பன்னீர்செல்வம் தொடர்பாக திமுக இறுதி முடிவு எடுக்கும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

