
கிழக்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்றது ஜவ்வாது மலை. வடக்கே அமிர்தி (வேலூர்), தெற்கே சிங்காரப்பேட்டை, கிழக்கே தும்பக்காடு (போளூர்), மேற்கே ஆலங்காயம் ஆகிய ஊர்களை எல்லைகளாகக் கொண்டு 250 சதுர கிலோ மீட்டரில் பரந்து கிடக்கும் ஒரு இயற்கை வளம் கொண்ட மலையே ஜவ்வாது மலை.
இங்கு வாழும் மக்கள் வேட்டைதொழிலையும், வேளாண் தொழிலையும் தம் இரு கண்களாகக் கொண்டவர்கள். ஜவ்வாது மலை நிலத்தில் உள்ள ஒவ்வொரு ஊரும், ஒவ்வொரு காட்டுப்பகுதியும் தமிழரின் பண்டைய வரலாற்றை எடுத்துரைத்துக்கொண்டே இருக்கின்றன.

ஒவ்வொரு மலை ஊர்களிலும் பஞ்ச பாண்டவர் வீடு, வாளியர் கூடாரம், வேடியப்பன், பிள்ளையாரப்பன், நாச்சியம்மன், திக்கியம்மன், காளியம்மன், வேடன்கல், சின்னான்கல் என்னும் பெயர்களில் வரலாற்றுத் தடயங்கள் இருப்பதை கள ஆய்வுகளின் வழி அறிய முடிகிறது.
வரலாற்றுக்கு முந்தைய பெருங்கற்கால மனிதர்களின் புதைவிடங்கள் பல இம்மலையில் உள்ளன. இப்புதைவிடங்களை கற்திட்டை, கல்வட்டம், கற்குவியல், கற்பதுக்கை போன்ற பல பெயர்களில் அறிய முடியும்.

போளூருக்கு மேலுள்ள ஜவ்வாதுமலைப் பகுதியில் கீழ்ச்சேப்பிளி என்னும் ஊரில் 100-க்கும் மேற்பட்ட கற்திட்டைகள் கட்டுமானம் தளராமல் உள்ளன. 150-க்கும் மேற்பட்ட சிதை நிலைக் கற்திட்டைகளும் உள்ளன. இவை ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழந்தமிழரின் புதைவிடங்கள் ஆகும்.

இது போன்ற கற்திட்டைகள் வீரப்பனூரில் உள்ள கள்ளிப்பாறையிலும், திருப்பத்தூரை அடுத்துள்ள கல்லாவூர், கோம்பை ஆகிய ஊர்களிலும் இன்றும் காணலாம். இத்தகைய பழமையான நினைவுச் சின்னங்களை இம்மக்கள் சிதைக்காமல் பாதுகாத்து வருவது சிறப்புக்குரிய ஒன்றாகும். இக்கற்திட்டைகளை மலை மக்கள் வாளியர் கூடாரம், வாளியர் வீடு, குள்ளர் வீடு, பஞ்சபாண்டவர் குகை போன்ற பெயர்களில் அழைத்து வருகின்றனர்.

ஜவ்வாது மலையில் உள்ள ஊர்களில் பரவலாகப் பிள்ளையார் வழிபாடு உள்ளது. பிள்ளையார் என்பது இங்குப் பெரும்பாலும் கற்கோடரிகளாகவே உள்ளன. இவைப் புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல்லாயுதங்கள் ஆகும். இவை 4 ஆயிரம்ஆண்டுகள் பழமையான பண்பாட்டை உடையன.

கோடரியைப் போன்ற வடிவத்தில், கல்லை வடிவமைத்துப் பழைய மனிதர்கள் (பழந்தமிழர்) வேட்டையாடிய வேட்டைக் கருவிகள் இவை. இக்கருவிகள் சிறிதும் பெரிதுமாக ஏராளமான வடிவங்களில் மலைக் கிராமங்களில் பரவலாக உள்ளன.


