
வாரிசு சான்றுக்காக இரண்டு ஆண்டுகளாக அலைக்கழிக்கப்பட்ட முதியவர், வருவாய் ஆய்வாளர் அலட்சியத்தை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவில்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வக்கீல் தெருவைச் சேர்ந்தவர் பூவலிங்கம். இவரது மருமகன் சீதாராமன் 2022ம் ஆகஸ்ட் மாதம் இறந்துவிட்டார். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வாரிசுச் சான்று கேட்டுக் கோவில்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் 2022ம் ஆண்டு நவம்பரில் பூவலிங்கம் விண்ணப்பித்துள்ளார்.
வருவாய் ஆய்வாளர் ராஜசேகரிடம் அந்த மனு விசாரணையில் இருந்துள்ளது. தாசில்தாரிடம் முறையிட்டும் அந்த மனுமீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2 ஆண்டுகளாக முதியவர் பூவலிங்கம் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கோவில்பட்டி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளரும், நகராட்சி கவுன்சிலருமான சீனிவாசன் வருவாய் ஆய்வாளர் ராஜசேகரிடம் சென்று மனுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு வருவாய் ஆய்வாளர் பார்ப்போம் என்று அலட்சியமாகப் பதில் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, சீனிவாசன், பூவலிங்கம் உள்ளிட்டோர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன் அமர்ந்து மனுமீது நடவடிக்கை எடுக்கும்வரை தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, தகவலறிந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதுபோல், வருவாய் ஆய்வாளர்மீது மேல ஈரால் கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் பட்டா மாற்றம் செய்ய 4 மாதமாக அலைவதாகவும், இளம்பெண் ஒருவர் ஆதரவற்ற விதவை சான்று பெறுவதற்கு அலைந்து வருவதாகவும் அடுத்தடுத்து புகார் செய்ததால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 15 நிமிடத்தில் வாரிசு சான்றுக்குக் கையெப்பமிட்டு அனுப்பியபின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுந்து சென்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிட்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சீனிவாசன் கூறுகையில் குறைந்தது 5000 ரூபாய் கொடுத்தால் தான் இங்கு வேலை நடப்பதாகவும்,, ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


