
வகயாமா மாகாணத்திலிருந்து ஏவப்பட்ட கைரோஸ் ராக்கெட் வெடித்து சிதறும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
டோக்கியோ: ஜப்பானின் ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘ஸ்பேஸ் ஒன்’ நிறுவனம் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான ராக்கெட் தொழில்நுட்ப பணிகளை மேற்கொண்டது. அரசின் ஒப்புதல் கிடைத்த நிலையில், ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள வகயாமா மாகாணத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து, ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் கைரோஸ் ராக்கெட் இன்று ஏவப்பட்டது.
அரசின் சிறிய அளவிலான சோதனை செயற்கைக்கோளைச் சுமந்தபடி சீறிப்பாய்ந்த ராக்கெட், ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட சில வினாடிகளில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. 18 மீட்டர் நீளமுள்ள ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் வெடித்து சிதறி தீப்பிடித்தன. இதையடுத்து ஸ்பிரிங்லர்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டது. இதனால் எரிந்துகொண்டிந்த பாகங்கள் சுற்றியுள்ள மலை சரிவுகளில் விழுந்தன. ராக்கெட் வெடித்து சிதறும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
செயற்கைக்கோளை வெற்றிகரமாகப் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய முதல் ஜப்பான் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்பேஸ் ஒன் நிறுவனம் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் முதல் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இந்தத் தோல்வியானது, வருவாய் ஈட்டக்கூடிய வகையில் செயற்கைக்கோள் ஏவும் ஜப்பானின் முயற்சிகளுக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.


