
தாய்லாந்தும் , கம்போடியாவும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக டொனால்டு டிரம்ப் அறிவித்த பிறகும், எல்லையில் இரு நாட்டுப் படை வீரர்களிடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியில் இருநாட்டுப் படையினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலில் குறைந்தது 21 பேர் உயிரிழந்தனர்.
எல்லைப் புறப் பகுதிகளில் இருந்து 7 இலட்சம் பேர் வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் இரு நாடுகளும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இருப்பினும் இரு நாட்டுப் படையினரிடையே மோதல் நீடித்து வருகிறது.
இது குறித்துப் பேசிய தாய்லாந்து பிரதமர் அனுதின் சரண்வீரகுல், எல்லைப் பகுதியில் புதைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றுவது, படையினரை விலக்கிக்கொள்வது ஆகிய இரு நிபந்தனைகளைக் கம்போடியா ஏற்றுக்கொண்டால்தான் போர்நிறுத்தம் என்று தான் டிரம்பிடம் கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.
தாய்லாந்தின் இரண்டு போர் விமானங்கள் ஏழு குண்டுகளை வீசித் தாக்கியதாகவும், இன்னும் தாக்குதலை நிறுத்தவில்லை என்றும் கம்போடிய பாதுகாப்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.




