
ஜப்பான் நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்சு மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குப் பரப்பான சூழல் நிலவுகிறது.
ஹோன்சு: ஜப்பான் நாட்டில் கடந்த ஒருவாரமாகத் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. ஜப்பானின் இஷிகாவா மாகாணம் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் புத்தாண்டு தினத்தன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அவற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 161 பேர் பலியாகி உள்ளனர்.
இதேபோல இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.7 பதிவான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை. இதற்கு முன் ஜனவரி 4ம் தேதியும் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஜப்பான் நாட்டின் ஹோன்சு நகரின் மேற்கு கடற்கரை பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக இதுவரை தகவல் கிடைக்கவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.



