Jallikattu Kaalai: கண்ணீர் அஞ்சலி செலுத்திய மக்கள்!

ஜல்லிக்கட்டு காளைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய மக்கள்!

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்குட்பட்ட  நல்லகண்டம் சின்ன அய்யனார்சுவாமி கோவில் ஜல்லிக்கட்டு காளை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. அதற்கு கிராம மக்கள் ஒன்றுகூடி இறுதி அஞ்சலி செலுத்தினர்.

நல்லகண்டம் கோவில்மாடு கிராமத்தின் சார்பாக ஜல்லிக்கட்டுகாளையாக வளர்க்கப்பட்டு வந்தது. இந்த காளைக்கு வயது 22. அலங்காநல்லூர், பாலமேடு, சிவகங்கை, கொசவபட்டி, தவசிமடை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்று தங்கம், வெள்ளி, காசுகள் மற்றும் பல்வேறு பரிசுகளையும் பெற்று வீரர்களுக்கு சவால் விட்டு பெயர், புகழ் பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்து தந்தது.

கோவில் காளை உடல்நிலை குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து சின்ன அய்யனார் கோவில் காளைக்கு சிறுகுடி ஊராட்சி சுற்றுவட்டார கிராமமக்கள் ஒன்றுகூடி வேஷ்டி, துண்டுகள், மாலைகள் அணிவித்து சந்தனம் பூசி இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மேளதாளம் முழங்க வாகனத்தில் இறந்த கோவில் காளை எடுத்து செல்லப்பட்டு கோவில் மந்தை அருகில் அடக்கம் செய்யப்பட்டது. கிராமத்திற்கு பெருமை சேர்த்த கோவில்காளை இறந்ததால் கிராம மக்கள் சோகத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *