ISRO:வருகிற 15-ந்தேதி விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட்!

Advertisements

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ சார்பில் கார்டோ சாட், ஸ்காட்சாட், ரிசர்ட் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் தொலை தொடர்பு பயன்பாட்டுக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் புவிக்கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இ.ஓ.எஸ்.-08 எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ தற்போது வடிவமைத்துள்ளது.

இந்தச் செயற்கைக்கோளைச் சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவுவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து வருகிற 15-ந்தேதி காலை 9.17 மணிக்கு எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

இ.ஓ.எஸ்.-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். இது தரையிலிருந்து 475 கி.மீ. தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு, குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்- ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு மற்றும் சிக் யுவி டோசிமீட்டர் ஆகிய 3 ஆய்வுச் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இ.ஓ.ஐ.ஆர். கருவி பேரிடர் மேலாண்மை சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக இரவிலும் துல்லியமான படம் எடுக்க உதவும். இதேபோல் ஜி.என்.எஸ்.எஸ்-ஆர் கருவி மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளைக் கண்டறிதல் போன்ற பணிகளுக்குப் பயன்படும். சிக் யுவி டோசி மீட்டர் (SiC UV Dosimeter) விண்ணில் புற ஊதா கதிர்வீச்சு அளவை கண்காணித்து எச்சரிக்கை அளிக்கும். இது மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்திலும் இடம் பெற உள்ளது. மேலும் எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வுகளை இந்தக் கருவிகள் மேற்கொள்ள உள்ளன என்றும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *