ISRO: விஞ்ஞானிகளுக்கு பரிசுதொகை அறிவிப்பு!  

Advertisements

தமிழக விஞ்ஞானிகள் 9 பேருக்கும் தலா ரூ.25 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை: இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு ‘ஒளிரும் தமிழ்நாடு, மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல், உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

நிலவைத் தொட்ட 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. சந்திரயான்-3 திட்டம் வெற்றியைத் தொடர்ந்து தமிழ்நாட்டு விஞ்ஞானிகள்பற்றிய செய்தி கொடிகட்டி பறந்தது. இந்தியாவின் பக்கம் உலகத்தையே பார்க்க வைத்த விஞ்ஞானிகள் இங்கு அமர்ந்திருக்கின்றனர்.

வீரமுத்துவேல் உள்ளிட்ட தமிழர்கள் இஸ்ரோவில் கொடிகட்டி பறப்பது தமிழகத்திற்கு பெருமை. தமிழ்நாட்டு விஞ்ஞானிகள் 9 பேரில் 6 பேர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள். தமிழர்களின் வானியல் அறிவு தனித்துவமானது. விருப்பு, வெறுப்பற்ற வகையில் அறிவியலைப் பின்பற்றுபவர்கள் தமிழர்கள்.

தமிழ்நாட்டுக்கும் தேசத்திற்கும் பெருமை சேர்த்த விஞ்ஞானிகள் 9 பேருக்குத் தலா ரூ.25 லட்சம் பரிசாக வழங்கப்படும். 7.5 சதவீத ஒதுக்கீட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்குச் சாதனை விஞ்ஞானி என்ற பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.10 கோடி தொகுப்பு நிதி ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *