Israel-Hamas war: மீண்டும் போர் தொடங்கியது!

Advertisements

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மீண்டும் போர்  தொடங்கியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஜெருசலேம்: இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240க்கும் மேற்பட்டோரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.

போரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரின்போது மேற்குகரை பகுதியிலும் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் மேற்குகரையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சித்தன. இந்த முயற்சியின் பலனாக கடந்த 24ம் தேதி முதல் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

மேலும், நிபந்தனை அடிப்படையில் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளில் சிலரை ஹமாஸ் விடுவித்தது. இதற்கு மாறாக தங்கள் நாட்டின் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களில் சிலரை இஸ்ரேல் விடுவித்தது.

அதன்படி, கடந்த 7 நாட்களாக அமலில் இருந்த தற்காலிக போர் நிறுத்தத்தின் பயனாக ஹமாஸ் வசமிருந்த பணயக்கைதிகளில் 105 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில், 81 பேர் இஸ்ரேலியர்கள், 23 பேர் தாய்லாந்து நாட்டினர், ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஆவார். அதேவேளை, காசாமுனையில் ஹமாஸ் வசம் இன்னும் 137 பேர் பணய கைதிகளாக உள்ளனர்.

இதனிடையே, தற்காலிக போர் நிறுத்தம் இன்று காலை 7 மணியுடன் (இஸ்ரேல் நேரப்படி) நிறைவடைந்தது. போர் நிறுத்தத்தை நீட்டிக்க கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் – ஹமாசிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

தற்காலிக போர் நிறுத்த காலக்கெடு நிறைவடைந்த நிலையில் காசாமுனையில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசா முனையில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், காசாவில் தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது.

அதேபோல், இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதலை நடத்தினர். மேலும், காசாவில் இஸ்ரேல் படையினர் – ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. இதனால், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மீண்டும் போர் தொடங்கியுள்ளது. போர் மீண்டும் தொடங்கியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *