Israel Gaza War:காசாவில் தொடரும் சோகம்! இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 34 பேர் பலி.!

Advertisements

வடக்கு காசாவில் கடந்த சில வாரங்களாகத் தனது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது.

காசா:பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடந்த ஓர் ஆண்டாகப் போர் தொடுத்து வருகிறது.

இந்தப் போரில் இதுவரை சுமார் 43 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் காசாவில் போரை நிறுத்த வேண்டுமென உலக நாடுகள் இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழிக்கும் வரையில் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லையெனக் கூறி வரும் இஸ்ரேல் காசா மீதான தாக்குதலைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் கடந்த சில வாரங்களாக வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வடக்கு காசா பகுதியில் பாலஸ்தீனர்கள் தஞ்சமடைந்த 5 மாடி கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 34 பேர் உயிரிழந்தனர். அதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கட்டிட இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாகவும், எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுவதாகவும் காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே வடக்கு காசாவில் உள்ள பீட் லஹியா நகரில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 20 பேர் காயமடைந்துள்ளதாகக் காசா சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *