கோமியம் நல்லதா? மன்னிப்பு கேளுங்க! சென்னை ஐஐடி இயக்குநருக்கு மாணவர் கழகம் வலியுறுத்தல்

Advertisements

மாட்டுப் பொங்கல் பண்டிகையை ஒட்டி,  சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் கோ பூஜை நடைபெற்றது. இந்தப் பூஜையில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கோமியம் குடித்தால் ஜூரம் சரியாகிடும் என்றார்.

மாணவர்களுக்குக் கல்வியை போதிக்கும் இந்தியாவின் உச்சபட்ச கல்வி நிறுவனத்தின் இயக்குநர் அறிவியலுக்குப் புறம்பாகப் பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

காமக்கோடியின் இந்தக் கருத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், பலர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஐ.ஐ.டி. இயக்குநருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஐ.ஐ.டி. மெட்ராஸ் இயக்குநரே போலி அறிவியலைப் பரப்புவது பொருத்தமற்றது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

கோ பூஜை நிகழ்வில் பேசிய ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, “எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரைச் சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்தச் சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது.”

“கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *