
இஸ்ரேல்-ஈரான் இடையேயான போரில், இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் கிடைபதில் பாதிப்பு ஏற்படாது என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கச்சா எண்ணெய் போக்குவரத்தின், முக்கிய வழித்தடமான, ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என தகவல் வெளியாகி உள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் பயன்பாட்டில் இந்தியா 3வது நாடாக திகழ்கிறது. தனது மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதில் 40 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வழியாக கச்சா எண்ணெய் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் கச்சா எண்னெய் கிடைபதில் தற்போது வரை எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை, இருப்பினும், இஸ்ரேல்-ஈரான் இடையேயான போரில் கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால், விரைவில் அதன் தாக்கம் தென்படலாம் என கூறப்படுகிறது.



