“உங்க பாதுகாப்ப பாத்துக்கோங்க!” உணவு வாகனத்தில் தப்பியோடிய ட்ரம்ப்..!

Advertisements

மத்திய கிழக்கின் மணற்பரப்பில் இப்போது பதற்றத்தின் நெருப்பு எரிகிறது.. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய ராணுவத் தளபதி அமீர் ஹதாமி வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு உலகை உலுக்கியுள்ளது.

அது என்னவென்றால், ஆக்கிரமிப்பு அமெரிக்க ராணுவ வீரரைக் கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்து ஒப்படைத்தாலோ 30,000 டாலர்கள் சன்மானம் வழங்கப்படும்…மேலும் , இந்தச் செயலில் களமிறங்கும் துணிச்சல்மிக்க பெண்களுக்கு சன்மானம் இரட்டிப்பாக அதாவது , 60,000 டாலர்கள் வெகுமதி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்..

மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கா முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன் வெளியாகி இருக்கும் இந்த அறிவிப்பு, இரு நாடுகளுக்கு இடையேயான போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. இந்த விபரீத விளையாட்டு எங்கு போய் முடியப் போகிறது? இது குறித்து தற்பொழுது விரிவாக பார்க்கலாம்..!

மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான வார்த்தைப் போரும், ராணுவ ரீதியிலான நேரடி சவால்களும் சர்வதேச அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், ஈரானிய ராணுவத் தளபதி அமீர் ஹதாமி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு உலக நாடுகளை உலுக்கியுள்ளது.

ஈரானிய அரசாங்க செய்தி நிறுவனமான IRNA வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆக்கிரமிப்பு அமெரிக்க ராணுவ வீரரைக் கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்து தன்னிடம் ஒப்படைத்தாலோ, ஈரான் இஸ்லாமிய குடியரசின் ராணுவத்திடம் இருந்து 30,000 அமெரிக்க டாலர்கள் அல்லது 5 பில்லியன் டோமான்களுக்கு இணையான பெருந்தொகை வெகுமதியாக வழங்கப்படும் என்று அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்த ஆபத்தான மற்றும் துணிச்சலான செயலில் ஈடுபடும் ஈரானிய பெண்களுக்கு இந்த வெகுமதி அப்படியே இரட்டிப்பாக்கப்பட்டு 60,000 டாலர்கள் வழங்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுபோக, ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையின்படி, அமெரிக்க வீரரைக் கொல்லப் பயன்படுத்தப்படும் ஆயுதம் இருமடங்கு விலைக்கு வாங்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நபருக்குப் புதிய நவீன ஆயுதமும் பரிசாக வழங்கப்படும் என்று ஹதாமி கூறியுள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 28 முதல் சுமார் 40 நாட்கள் நீடித்த கடுமையான சண்டைக்குப் பிறகு, ஜூன் 17-ஆம் தேதியன்று கையெழுத்தான அமெரிக்க-ஈரான் இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள 60 நாள் காலக்கெடு நெருங்கும் வேளையில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தையே கேள்விகுறியாக்கியுள்ளது.

இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சு மேலும் நெருப்பை அள்ளி வீசுவது போல அமைந்தது. போரில் ஈரானை முழுமையாக வீழ்த்திய பிறகு, உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்துக்கு மிக முக்கிய நாடித்துடிப்பாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் பிராந்தியப் பகுதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்றும், அமெரிக்கக் கடற்படை அப்பகுதியில் முழுமையான முற்றுகையை ஏற்படுத்தியுள்ளதாகவும் ட்ரம்ப் முழங்கினார்.

ட்ரம்பின் இந்தப் பேச்சுக்கு ஈரான் தரப்பிலிருந்து கொதிப்பான எதிர்வினைகள் உடனடியாக வெளிப்பட்டன. ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைவரான இப்ராஹிம் அசிசி, தனது எக்ஸ் தளத்தில் ட்ரம்புக்கு மிகவும் காரசாரமான ஒரு எச்சரிக்கையையும் கிண்டலையும் விடுத்தார்.

அதில், ஹார்முஸ் ஜலசந்தி குறித்து ஓயாமல் வீண் சவால் விடுவதை விட்டுவிட்டு, கடந்த முறை துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டின் போது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக உணவுப் பொருள் கொண்டு செல்லும் வாகனத்தில் ரகசியமாக ஒளிந்துகொண்டு தப்பியோடிய நிலை மீண்டும் தனக்கு வராமல், ட்ரம்ப் தனது சொந்தப் பாதுகாப்பில் தீவிரக் கவனம் செலுத்துவது நல்லது என்று கடுமையாகச் சாடினார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து ஈரானின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் காசிம் கரீபாபாடி விளக்குகையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஏதோ ஒரு எக்ஸ் பதிவாலோ, போர்க்கப்பல்களின் மிரட்டல்களாலோ அல்லது தேர்தல் பிரச்சாரப் பேச்சுகளாலோ எப்போதுமே கைப்பற்றிவிட முடியாது என்றும், ஈரானை ராணுவ பலத்தைக் காட்டி ஒருபோதும் அச்சுறுத்த முடியாது என்றும் திட்டவட்டமாக எச்சரித்தார்.

இந்த வார்த்தைப் போரும் பரஸ்பர அச்சுறுத்தல்களும் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ட்ரம்பின் பேச்சுக்குப் பின்னால் வெள்ளை மாளிகை தரப்பில் இருந்து ஒரு விளக்கமும் அளிக்கப்பட்ட்டது.அதாவது, ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கப் பகுதியாக மாற்றுவது குறித்து ட்ரம்ப் பேசியது வெறும் ஒரு நகைச்சுவைக்காகவும் தேர்தல் களம் சார்ந்துமே தவிர, அது எந்த வகையிலும் தீவிரமான அரசாங்கக் கொள்கை அல்ல என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்து பதற்றத்தைத் தணிக்க முயன்றார்.

இருப்பினும், ஈரானிய ராணுவத்தின் தலைவிலை அறிவிப்பும், ஹார்முஸ் ஜலசந்தியை மையமாகக் கொண்ட ஆதிக்கப் போட்டியும் உலக வல்லரசுகளுக்கு இடையே எப்போது வேண்டுமானாலும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு சூழலை உருவாக்கி இருப்பதோடு, மத்திய கிழக்கின் எதிர்காலத்தை மிகப்பெரிய கேள்விக்குறியாக மாற்றியுள்ளது. இந்நிலையில், வெள்ளை மாளிகை இதை ஒரு ‘நகைச்சுவை’ என்று கடந்துபோகப் பார்க்கலாம்;

ஆனால், ஈரானின் ஒவ்வொரு மிரட்டலும், அந்தந்த நாட்டுத் தலைவர்களின் எக்ஸ் (X) பதிவுகளும் சர்வதேச அரங்கை ஒரு நடுக்கத்திலேயே வைத்துள்ளன. ஒப்பந்தங்களும் தற்காலிக போர் நிறுத்தங்களும் காகிதத்தில் வேண்டுமானால் எழுதப்படலாம்; ஆனால், இந்த மண்ணில் மூளும் ஆதிக்கப் பசியும் பழிவாங்கும் வெறியும் எப்போது வேண்டுமானாலும் ஒட்டுமொத்த உலகையும் ஒரு பேரழிவின் விளிம்பிற்குக் கொண்டுவந்து நிறுத்தலாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *