Iran Israel war:கச்சா எண்ணெய் விலை மூன்று சதவீதம் அதிகரிப்பு !பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு!

ஜெருசலேம்: ‘ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி மிகப் பெரிய தவறை செய்துள்ளது. இதற்குப் பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும்’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்தார். போர் பதற்றம் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

இஸ்ரேல் மீது ஈரான் 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி நேற்று இரவுத் தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மரணத்திற்கு பழிவாங்கவே இந்தத் தாக்குதலைத் துவங்கியதாக ஈரான் அறிவித்துள்ளது. இதற்குப் பதில் அளித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியருப்பதாவது:

ஈரான் பெரும் தவறை செய்து விட்டது. தவறுக்கான விலையை ஈரான் கொடுத்தே ஆக வேண்டும். இஸ்ரேலின் வான் பாதுகாப்பு சிறப்பாக இருந்ததால், ஈரான் முயற்சி தோல்வி அடைந்தது. இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இதுகுறித்து, சமூகவலைதளத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை ஆஸ்திரேலியா கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியதாவது: மத்திய கிழக்கு நாடுகளை ஈரான் சீர்குலைக்கிறது. இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா வேடிக்கை பார்க்காது என்றார்.

இஸ்ரேலில் இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இஸ்ரேல் அரசு சொல்லும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். 24 மணி நேர உதவி எண்களை 972-547520711, 972-543278392 தொடர்பு கொள்ளலாமென இந்திய தூதரகம் அறிவித்தது. இஸ்ரேல் ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

ஈரான் ஏவுகணை தாக்குதலைத் துவக்கிய உடனேயே மேற்கத்திய நாடுகளின் எண்ணைச் சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம் எனத் தகவல்கள் வெளியாகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *