
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அரசுப்பள்ளியில் பயிலும் பொதுத்தேர்வினை எழுதவுள்ள மாணவ மாணவிகளுக்குச் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் எழுதுபொருட்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை வழங்கும் விதமாக உலகம் முழுவதும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலமாக ஐந்தரை லட்சம் செலவில் புதிய கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியர் சுலோச்சனா மற்றும் ஒன்றிய குழுத் தலைவர் மௌதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு புதிய அரங்கத்தினை திறத்துவைத்து இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவ மாணவிகளுக்கு எழுது பொருட்களை இலவசமாக வழங்கித் தேர்வைச் சிறப்பாக எழுதிட வேண்டுமென அறிவுறைகளை கூறி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா ராமச்சந்திரன் மற்றும் ஒன்றிய செயலாளர் குறிஞ்சி நாதன் உள்ளிட்ட அதிமுக வைச்சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.


