
மத்திய அரசுச் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சமூகநீதி நாயகன் எனப் போற்றப்படும் முன்னாள் பிரதமர் வி.பி,. சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதன்படி, காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் வி.பி. சிங்கிற்கு முழு உருவ சிலை அமைக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், வி.பி.சிங்கின் மனைவி சீதாகுமாரி, மகன்கள் அஜயா சிங், அபய்சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
வி.பி. சிங்கின் சிலையைத் திறந்து வைத்தபிறகு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மக்கள் தொகை கணக்கெடுப்போடு, சாதி வாரிக் கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு முழுமையாக, முறையாக வழங்கப்பட வேண்டும். பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மையினர் இடஒதுக்கீடும் முறையாக வழங்கப்பட வேண்டும்.
இடஒதுக்கீட்டை முறையாகக் கண்காணிக்க அனைத்துக் கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் சாதிகள் வேறுபடலாம். ஆனால், பிரச்னைகள் ஒன்றுதான். புறக்கணிப்பு, ஒதுக்குதல், அடிமைத்தனம், தீண்டாமையை முறிக்கும் மருந்து தான் சமூகநீதி” எனப் பேசியுள்ளார்.



