Infant Death: “பச்சிளம் குழந்தை மரணம்” போராட்டத்தில் குதித்த உறவுகள்!

Advertisements

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் வயிற்றிலேயே குழந்தை இறந்ததாக கூறி அவரது  உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பாப்பாநாடு புது வளவு கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவர் ரமணி. இவரது  மனைவி கண்ணகி வயது 33. நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று மாலை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை வரை கண்ணகிக்கு எந்தவித மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து வயிற்று வலியால் துடித்த கண்ணகியை அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது சிறிது நேரம் கழித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கண்ணகியின் குழந்தை வயிற்றிலேயே இறந்து பிறந்ததாக கண்ணகியின் உறவினர்களிடத்தில் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் தான் குழந்தை இறந்துவிட்டதாக கூறி மருத்துவமனை ஊழியர்கள் இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் கிடைத்த பட்டுக்கோட்டை நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் கண்ணகியின் உறவினர்கள் ஆகியோர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து சுகாதாரத்துறை இணை இயக்குனருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதுவரை கண்ணகியின் உறவினர்களை பொறுமை காக்கும்படி காவல்துறையினர் கேட்டுக் கொண்டதை அடுத்து கண்ணகியின் உறவினர்கள் அமைதி காத்தனர். இந்த நிலையில் இணை இயக்குனர் திலகம் வந்ததும் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் கண்ணகியின் உறவினர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இணை இயக்குனர் மருத்துவமனையின் ஊழியர்களுக்கு சாதகமாக பேசியதாக கூறி ஆவேசமடைந்து கண்ணகியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அரசு மருத்துவமனை வளாகம் முன்பு மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து வெளிவரும் பேருந்துகள் போக்குவரத்து தடைபட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *