
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
இதில், ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அசத்தியது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன் குவித்தது.
அபிஷேக் சர்மா அதிரடியாகச் சதம் அடித்தார். அவர் 54 பந்தில் 135 ரன்கள் (7 பவுண்டரி, 13 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார்.
சிவம் துபே 13 பந்தில் 30 ரன்களை (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகள், மார்க் வுட் 2 விக்கெட்டுகள், ஜோப்ரா ஆர்ச்சர், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷீத் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் நிலை குலைந்தது. அந்த அணி 10.3 ஓவரில் 99 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து தரப்பில் சால்ட் அதிகபட்சமாக 23 பந்தில் 55 ரன்னும் (7 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, சிவம் துபே, அபிஷேக் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் 1 விக்கெட்டு வீழ்த்தினர்.
இந்த வெற்றிமூலம் இந்தியா 20 ஓவர் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நேற்று நடந்த போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டன. சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்துக்கு மேல் வெற்றி பெறுவது 8-வது முறையாகும்.
இதன் மூலம் ஜப்பானுடன் இணைந்து முதல் இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்தது.
டி20 போட்டியில் 104 நாடுகள் விளையாடுகின்றன. இதைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அங்கீகரித்துள்ளது.
இதுவரை கனடா அணி 7 முறை, உகாண்டா, மலேசியா, ஜிம்பாப்வே அணிகள் தலா 6 முறையும் 100 ரன்கள் வித்தியாசத்துக்கு மேல் வெற்றி பெற்றுள்ளன.
சர்வதேச டி20 கிரிக்கெட்டி இந்தியா அணியின் இரண்டாவது மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்துள்ளது.
முன்னதாக 2023-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக 168 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே முதல் நிலையாக இருக்கிறது.
இதுதவிர இந்திய அணி அயர்லாந்துக்கு எதிராக 143 ரன்கள், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 135 ரன்கள், 106 ரன்கள், வங்கதேசம் அணிக்கு எதிராக 133 ரன்கள், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 101 ரன்கள், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 100 ரன்கள் என ஆறு முறை 100 ரன் வித்தியாசத்துக்கு மேல் வெற்றிபெற்று இருக்கிறது.
நேற்றைய போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா 37 பந்தில் சதம் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இவர் தவிர இந்திய வீரர்களான ரோகித் சர்மா (35 பந்தில் சதம்), சஞ்சு சாம்சன் (40 பந்தில் சதம்) அடித்துள்ளனர்.
டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா 135 ரன் குவித்ததன் மூலம் ஒரே போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையைப் புரிந்தார்.
இதற்கு முன் சுப்மன் கில் 126 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.
மேலும் டி20 போட்டியின் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர் அடித்த இந்தியர் என்ற சாதனையையும் அபிஷேக் சர்மா (13 சிக்சர்கள்) படைத்தார்.
