காசா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அல்ஷிபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் இன்று அதிரடியாக நுழைந்தனர்.
இந்தப் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. மேலும், காசா மீது வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல், காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் தரைவழி தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். இதனால், காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் இன்று 40வது நாளை எட்டியுள்ள நிலையில் இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 600-ஐ கடந்துள்ளது. அதன்படி, இஸ்ரேல் மீது கடந்தமாதம் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாகக் காசாமுனை மீது இஸ்ரேல் தரைவழி, வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் காசாமுனையில் இதுவரை 11 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைமையில் செயல்பட்டு வரும் பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல், மேற்குக்கரையில் நடந்த மோதலில் இதுவரை 185 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 685ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், காசா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அல்ஷிபா மருத்துவமனையை இஸ்ரேல் தரைப்படை சுற்றிவளைத்துள்ளது. அல்ஷிபா மருத்துவமனை வளாகத்திலிருந்து இஸ்ரேல் படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இஸ்ரேல் படை பதிலடி கொடுத்தது. அதேவேளை, காசாமுனையின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்ஷிபா மருத்துவமனையின் அடித்தளத்தில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைமையிடம் அமைந்துள்ளதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், அல்ஷிபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் இன்று அதிரடியாக நுழைந்தனர். மருத்துவமனையின் தரைத்தளம் உள்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் படையினர் சோதனை நடத்தினர். அறுவைசிகிச்சை மற்றும் அவசரசிகிச்சை பிரிவுகள் அமைந்துள்ள பகுதிகளிலும் நுழைந்து இஸ்ரேல் படையினர் சோதனை நடத்தினர்.