India vs England, Semi Final: சுழலில் சுருண்ட இங்கிலாந்து..10 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்குச் சென்ற இந்தியா!

Advertisements

இங்கிலாந்திற்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கயானாவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து மழையை கருத்தில் கொண்டு பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாகக் கேப்டன் ரோகித் சர்மா 57 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும், ஹர்திக் பாண்டியா 23 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களும் எடுத்தனர்.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் இங்கிலாந்து அணியில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட் எடுத்தார். ரீஸ் டாப்லி, ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரண், அடில் ரஷீத் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின்னர் கடின இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.

இதில், முதல் 3 ஓவர்களில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்திருந்தது. 4ஆவது ஓவரை அக்‌ஷர் படேல் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஜோஸ் பட்லர் 23 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

போட்டியின் 4.4 ஆவது ஓவரில் பிலிப் சால்ட் கிளீன் போல்டானார். விராட் கோலி எப்படி ஆட்டமிழந்தாரோ அதே போன்று பும்ரா பந்தில் சால்ட் கிளீன் போல்டானார். இதே போன்று அக்‌ஷர் படேல் வீசிய போட்டியின் 5.1 ஆவது ஓவரில் ஜானி பேர்ஸ்டோவ் 0 ரன்னில் நடையை கட்டினார். இதையடுத்து 7.1ஆவது ஓவரில் மொயீன் அலி ஸ்டெம்பிங் முறையில் 8 ரன்னில் நடையை கட்டினார்.

அப்போது இங்கிலாந்து 8 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து குல்தீப் யாதவ் பந்து வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே சாம் கரண் 2 ரன்னில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். கடைசியில் 10.4ஆவது ஓவரில் ஹாரி ஃப்ரூக் (25 ரன்கள்) விக்கெட்டைக் குல்தீப் யாதவ் கைப்பற்றினார்.

அப்போது இங்கிலாந்து 11 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் எடுத்திருந்தது. குல்தீப் யாதவ் தனது கடைசி ஓவரில் கிறிஸ் ஜோர்டன் விக்கெட்டை எடுத்தார். இதன் மூலமாக இந்தத் தொடரில் குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதே போன்று அக்‌ஷர் படேல் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்துக் கொடுத்தார்.

போட்டியின் 14.5ஆவது ஓவரின் லியாம் லிவிங்ஸ்டன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து அடில் ரஷீத் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க, கடைசியாக ஜோஃப்ரா ஆர்ச்சர் பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

இதன் மூலமாக இங்கிலாந்து 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்து 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்தியா 10 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்னதாக முதல் முறையாகத் தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை வென்றது.

அதன் பிறகு, 2014 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 2ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குச் சென்றது. அதில் இலங்கையிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் தான் தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இறுதிப் போட்டியில் காலடி எடுத்து வைத்துள்ளது. மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு இங்கிலாந்திற்கு பதிலடி கொடுத்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *