டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு தொடர்புடைய 30 இடங்களில் சிபிஐ சோதனை நடந்து வருகிறது. காஷ்மீர் ஆளுநராக இருந்த சமயத்தில் நீர் மின் திட்டத்திற்கான ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் 23, 2018 முதல் அக்டோபர் 30, 2019 வரை ஜம்மு காஷ்மீர் ஆளுநராகப் பணியாற்றியவர் சத்ய பால் மாலிக். இந்தச் சமயத்தில் இரண்டு கோப்புகளில் கையெழுத்து பெறுவதற்காகத் தனக்கு ரூ.300 கோடிவரை லஞ்சம் தர முயன்றனர் என்று சத்ய பால் மாலிக் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த இரண்டு கோப்புகளில் ஒன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றிலிருந்து 624 மெகாவாட் நீர் மின் உற்பத்தி திட்டத்துக்கான ஒப்புதல் கோப்பு. இந்தத் திட்டத்தில் சத்யபால் மாலிக் லஞ்சம் பெற்றிருக்கலாம் என்று புகார் எழுந்ததை தொடர்ந்து டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள எட்டு இடங்களில் கடந்த மாதம் சிபிஐ சோதனை நடத்தியது.
இந்தச் சோதனையின் தொடர்ச்சியாகத் தற்போது சத்யபால் மாலிக்கின் டெல்லி இல்லம் உட்பட அவருக்குத் தொடர்புடைய 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை தொடர்பாகப் பேசியுள்ள சிபிஐ அதிகாரி ஒருவர், “2019-ம் ஆண்டில் கிரு ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் ப்ராஜெக்ட் (ஹெப்) ஒரு தனியார் நிறுவனத்திற்கு சுமார் 2,200 கோடி ரூபாய் மதிப்பிலான குடிமராமத்து பணிகளை ஒப்பந்தம் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
