India – Sri Lanka: இறுதி போட்டி!

பாகிஸ்தானை வீழ்த்தி  இலங்கை அணி11-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் சந்திக்கின்றன.

கொழும்பு: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் சூப்பர்4 சுற்றின் முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையும், பாகிஸ்தானும் நேற்று மோதின.

மழை காரணமாக ஆட்டம் 2¼ மணி நேரம் பாதிக்கப்பட்டதால் 45 ஓவராகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி அப்துல்லா ஷபிக்கும், பஹர் ஜமானும் பாகிஸ்தானின் இன்னிங்சை தொடங்கினர். இதில் பஹர் ஜமான் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 29 ரன்னிலும், அப்துல்லா ஷபிக் 52 ரன்னிலும், முகமது ஹாரிஸ் 3 ரன்னிலும், முகமது நவாஸ் 12 ரன்னிலும் வெளியேறினர். பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 130 ரன்களுடன் தள்ளாடிய சூழலில், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானும், இப்திகர் அகமதுவும் கைகோர்த்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர்.

இடையில் மழையால் மேலும் அரைமணி நேரம் ஆட்டம் தடைபட்டதால் 42 ஓவராகக் குறைக்கப்பட்டது. இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 252 ரன்கள் சேர்த்தது. பின்னர், ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி இலங்கை அணி 42 ஓவர்களில் 252 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு சற்று மாற்றி அமைக்கப்பட்டது.  இதை நோக்கி ஆடிய இலங்கை அணியில் குசல் பெரேரா 17 ரன்னிலும், நிசாங்கா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்குக் குசல் மென்டிசும், சமரவிக்ரமாவும் இணைந்து அணியை நிமிர வைத்தனர்.

இவர்களை அவ்வளவு எளிதில் பாகிஸ்தான் பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. இறுதியாக இலங்கை அணி 42 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 11-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் சந்திக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *