
இந்திய – ஓமன் இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்புக்கான உடன்பாடு, வணிகத்தை ஊக்குவித்து, முதலீட்டுக்கான புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன், ஒவ்வொரு துறையிலும் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்து விடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இந்தியா – ஓமன் வணிகக் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓமன் வணிகத்துறை அமைச்சர் கைஸ் பின் முகமது அல் யூசுப் பேசினார். அப்போது ஓமனும் இந்தியாவும் வரலாற்றுக் காலந்தொட்டை வணிகத்தொடர்பும் ஒத்துழைப்பும் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்திய – ஓமன் வணிகக் கூட்டமைப்புக் கூட்டத்தில் பேசிய இந்திய வணிகம் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஓமனுக்கும் இந்தியாவுக்கும் இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்புக்கான உடன்பாடு கையொப்பமாகும் இந்த நாள் வரலாற்றுச் சிறப்புமிக்கது எனத் தெரிவித்தார். இந்த உடன்பாடு இருநாட்டு மக்களின் சிறப்பான எதிர்காலத்தைக் கட்டமைக்கும் முயற்சியாகும் என்றும் குறிப்பிட்டார்.
இந்திய – ஓமன் வணிகக் கூட்டமைப்புக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இருநாடுகளின் கூட்டுறவு புதிய உயரங்களை எட்டும் வகையில் ஒரு புதிய பாதையில் புதிய வேகத்தில் பயணிப்பதாகத் தெரிவித்தார். இதில் இருநாடுகளும் முதன்மைப் பங்காற்றுவதாகத் தெரிவித்தார். வரலாற்றுக் காலந்தொட்டே இந்தியாவும் ஓமனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.
இரு நாடுகளிடையான உறவு புதிய உயரத்தை எட்டும் என்று பிரதமர் கூறினார். இரு நாடுகளிடையான விரிவான பொருளாதார ஒத்துழைப்புக்கான உடன்பாடு புதிய நம்பிக்கையையும் புதிய ஆற்றலையும் வழங்கும் என்று தெரிவித்தார். இது வணிகத்தை ஊக்குவிப்பதுடன் முதலீட்டுக்கான புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன், ஒவ்வொரு துறையிலும் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்து விடும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


