
பாஜக ஆட்சி முடிவுக்குக் கவுண்டவுன் தொடங்கிவிட்டது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்…
மும்பை: இ.ந்.தி.யா கூட்டணியின் 3-வது கூட்டம் இரண்டாவது நாளாக இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. 28 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்க எதிர்க்கட்சிகள் முக்கிய வியூகம் வகுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது இ.ந்.தி.யா கூட்டணியில் உள்ள திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- “பாஜக ஆட்சி முடிவுக்குக் கவுண்டவுன் தொடங்கிவிட்டது.
மத்திய பாஜக ஆட்சிக்கு முடிவுகட்ட இ.ந்.தி.யா கூட்டணி சார்பில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இ.ந்.தி.யா கூட்டணி வலிமை மிக்க கூட்டணியாக உள்ளது” என்று கூறினார்.
இதேபோல் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது, இன்று, இரண்டு பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மேடையில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்தால், தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது சாத்தியமில்லை.

பாஜகவை இ.ந்.தி.யா கூட்டணி நிச்சயமாகத் தோற்கடிக்கும்.தொகுதி பங்கீடு குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதித்தோம். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கம்.
நமது எல்லை பகுதியைத் தங்களுடன் இணைத்துச் சீனா வரைபடம் வெளியிட்டுள்ளது.ஜி 20 மாநாடு நடக்கும் நிலையில் பிரதமர் மோடி மவுனம் கலைக்க வேண்டும்.எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாஜக அரசுக்கு எளியோர் மீது அக்கறை இல்லை, பணக்காரர்களைப் பற்றியே கவலை கொள்கிறது எங்களது நோக்கம் விலைவாசியை குறைப்பதுதான்.

சமையல் எரிவாயு விலையை ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏற்றிவிட்டு ரூ.200 குறைத்து நாடகம் ஆடுகிறார்கள். மத்திய புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறது. ஊழலை ஒழிப்பதை பற்றிப் பேசும் பாஜகதான் மிகப்பெரிய ஊழலைச் செய்து வருகிறது. பயப்பட மாட்டோம், ஊழலையும் அடக்குமுறையையும் எதிர்த்துப் போராடுவோம்” என்றார்.
இதேபோல உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- “இ.ந்.தி.யா கூட்டணியைப் பார்த்துப் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நடுக்கம் வந்துவிட்டது. இ.ந்.தி.யா கூட்டணி. வெற்றி கூட்டணி. நாங்கள் தனிப்பட்ட கூட்டணி அல்ல, நாங்கள் அனைவரும் இந்திய குடும்பம்.

எங்களின் அனைவருக்கும் ஒன்றுதான் நோக்கம். நாளுக்கு நாள் இ.ந்.தி.யா கூட்டணி வலுப்பெற்று வருகிறது. சிலிண்டர் விலை குறைப்பு தேர்தலை மனதில் வைத்து மேற்கொள்ளப்பட்டது” என்று கூறினார்.



