
டி20 உலகக் கோப்பை தொடரின் இதுவரையில் பும்ரா வீசிய 15 ஓவர்களில் 62 டாட் பந்துகளை வீசிப் புதிய சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், குரூப் சுற்று போட்டியில் இந்தியா விளையாடிய 3 போட்டிகளில் மூன்றிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்குச் சென்றது. கடைசி போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்தியா தவிர ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில், நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 சுற்று போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது.
இதில் அதிகபட்சமாகச் சூர்யகுமார் யாதவ் 53 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் ஆப்கானிஸ்தானின் அனைத்து பேட்ஸ்மேன்களும் கேட்சால் ஆட்டமிழந்துள்ளனர்.
இதற்கு முன்னதாகக் கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலாகப் பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் கேட்ச் மூலமாக இழந்தது.
இந்த நிலையில் தான் இதுவரையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய 15 ஓவர்களில் 62 டாட் பந்துகள் வீசிப் புதிய சாதனை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியி 4 ஓவர்கள் வீசிய புர்மா ஒரு மெய்டன் உள்பட 7 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்தப் போட்டியில் 24 பந்துகளில் பும்ரா 20 டாட் பந்துகள் வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் பும்ராவைத் தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், அக்ஷர் படேல் ஒரு விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

