
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாகப் பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார்குறித்து சீமான் அவதூறாகப் பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திமுக மாணவரணித் தலைவர் ராஜிவ் காந்தி,”சம்ஸ்கிருத திணிப்பை விட இந்தி திணிப்பை விடக் கொடிய திணிப்பு பெரியார் திணிப்பு என்று சீமான் இன்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் படித்தால் தான் டாக்டர் ஆக முடியும் பட்டம் பெற முடியும் என்ற நிலையை மாற்றி, சமஸ்கிருதத்திலிருந்து தான் தமிழ் பிறந்தது என்று ஒரு கோட்பாடு சொல்லியபோது தமிழ் என்பது தனித்த மொழி என்று அரசியல் களத்தில் பண்பாட்டுக் களத்தில் வென்று காட்டியவர் தந்தை பெரியார்.
சமஸ்கிருத திணிப்பை விட இந்தி திணிப்பை விடக் கொடிய திணிப்பு பெரியார் திணிப்பு என்று சீமான் பேசுவாரே என்றால் அவர் ஆர்.எஸ்.எஸ்.ஐ விட ஆபத்தானவர்.
ஆர்.எஸ்.எஸ்.-இன் கைக்கூலியாக மட்டுமில்லை, இந்திய அரசியலில் தமிழ்நாடு தமிழர் அரசியல், ஈழ விடுதலையில் தேசிய இன உரிமையென அத்தனையையும் காட்டிக்கொடுக்கிற ஆளாக இருக்கிறார்.
எங்களைப் போன்ற இளைஞர்களின் அறிவை சுரண்டி, பொருளாதாரத்தை சுரண்டி, உழைப்பை சுரண்டி, இன்னும் எத்தனையோ இளைஞர்கள் சீமான் சொல்லும் கதைகளை நம்புகிறார்கள்.
சீமானின் ஆமைக்கறி, மான் வேட்டை உள்ளிட்ட கதைகள் எல்லாம் விடுதலை புலிகள் அமைப்பைக் கொச்சைப்படுத்தியுள்ளது.
ஒரு போராளியை மாவீரரை ஸ்டார் ஓட்டல் செப் போலக் காட்டி, இளைஞர்களின் போராட்ட எழுச்சியை, தமிழ், தமிழர்மீதான உரிமையை மட்டுப்படுத்தியுள்ளார்.
இது ஆபத்தான மனநோய் மட்டுமில்லை, அரசியலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய அசிங்கம் சீமான்” என்று தெரிவித்தார்.
