
கடந்த 4-ம் தேதி சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த மாநில கல்லூரி மாணவரை மற்றொறு கல்லூரி மாணவர்கள் கொடூரமாகத் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள்மீது ரெயில்வே காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், இனி வரும் காலங்களில் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடாமல் இருக்கும் வகையில், ரெயில்வே காவல்துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளதாவது:- “கடந்த 4-ந் தேதி சென்டிரல் ரெயில் நிலையத்தில் மாநில கல்லூரியைச் சேர்ந்த மாணவரை மற்றொரு கல்லூரியைச் சேர்ந்த 5 பேர் வழிமறித்து கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அந்த மாணவர் உயிரிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட 5 மாணவர்களைக் கைது செய்து கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மோதல்களில் ஈடுபடும் மாணவர்கள்மீது கல்லூரி நிர்வாகமும் இடைநீக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை சென்டிரலிலிருந்து, மின்சார ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கல்லூரி மாணவர்கள் செல்லும்போது பேசின் பிரிட்ஜ் சந்திப்பில் ஒரே நேரத்தில் ரெயில்கள் நிற்கிறது. அந்த நேரத்தில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக் கொள்கின்றனர்.
இதனால், ரெயில்வே நிர்வாகத்தை அணுகி குறிப்பிட்ட ரெயில்களை தாமதமாக இயக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம். புதிய சட்டத்தின் அடிப்படையில் மோதல்களில் ஈடுபடும் மாணவர்கள்குறித்து சி.சி.டி.வி. கேமரா, செல்போன் வீடியோ உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் இருந்தாலே வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை உள்ளது.
அதனால், ரெயில் நிலையங்கள் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் இருப்பதால் பிரச்சனைகளில் ஈடுபடும் மாணவர்கள் எளிதில் அடையாளம் காணப்பட்டு அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், இது போன்று மோதலில் ஈடுபட்டால் புதிய சட்டதிருத்தத்தின் படி, பத்து ஆண்டுகள்வரை கடுங்காவல் தண்டனை கிடைக்கும்” என்றுத் தெரிவித்துள்ளனர்.
