Imran Khan: இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கிய கோர்ட்!

Advertisements

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது இஸ்லாமாபாத் கோர்ட்.

பாகிஸ்தானில் அரசின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் குற்றவாளி என தீர்ப்பளித்ததால் சிறையில் இருந்து வந்தார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார். 71 வயதான இம்ரான் கான்,  2018- ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஏப்ரல் 2022, வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமராக இருந்துள்ளார்.

இந்நிலையில் இம்ரான்கான் பதவியில் இருந்தபோது   வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் அவற்றை முறைகேடாக விற்று தனக்காக அவற்றை எடுத்து சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் சிறை செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

எனினும் தீர்ப்பை  எதிர்த்து மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு இம்ரான்கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. ஆனால் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் மீண்டும் மற்றொரு சிக்கலில் மாட்டி கைது செய்யப்பட்டார்.

இந்த கைதினை  தொடர்ந்து அவர் சிறையில் இருந்து வந்தார். இந்த சூழலில் ஜாமீன் கோரி அவரது தரப்பில் அந்நாட்டு சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரோஷி சார்பிலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

முன்னதாக இந்த மனுக்களை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளான சர்தார் தாரிக் மசூத், அதார் மினால்லா, சையத் மன்சூர் அலி ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதன்படி, இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இருவரும் தலா ரூ.10 லட்சம் பிணைத் தொகை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும்  இம்ரான் கான் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *