
சென்னை:
இந்திய அரசியல் அமைப்பை நாடு ஏற்றுக்கொண்டதன் 75-ம் ஆண்டு விழாவையொட்டி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடைபெற உள்ளது.
இன்றும், நாளையும் பாராளுமன்றத்திலும் 16, 17 தேதிகளில் மேல் சபையிலும் இந்த விவாதம் நடைபெறுகிறது. மற்ற அலுவல்களை ஒத்திவைத்து விட்டுச் சிறப்பு விவாதம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 25-ந்தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் அதானி குழுமத்துக்குச் சாதகமாக ஆளும்கட்சி செயல்படுவதாகவும், மணிப்பூர் வன்முறையைத் தடுக்க மத்திய அரசு தவறியதாகவும் கூறி பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பி வருகின்றனர். அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருவதால் அவையின் பெரும்பாலான அலுவல்கள் முழுமை பெறாமல் ஒத்தி வைக்கப்படுவது 5 நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்தது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கையான அரசியல் சாசனம் மீதான விவாதத்தைப் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைக்கிறார்.
மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித்ஷா திங்கட்கிழமை இந்த விவாதத்தைத் தொடங்கி வைக்கிறார்.
இந்த விவகாரத்தில் ஒவ்வொரு கட்சி சார்பிலும் 2 பேர் பங்கேற்று பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இறுதியில் பிரதமர் மோடி பதிலளிப்பார்.
இன்றும், நாளையும் நடைபெறும் இந்த விவாதத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா ஆ.ராசா உத்தரவிட்டுள்ளார்.



