Ilaiyaraaja Case: பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

இளையராஜா பாடலுக்கு உரிமை கோரிய வழக்கில் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார்  4500 பாடல்களைப் பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன.  ஒப்பந்தம் முடிந்த பிறகும்,  காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்துவதாககூறி இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி,  தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என உத்தரவு பிறப்பித்தார்.  மேலும் இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள்மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இல்லையெனக் கடந்த 2019ம் ஆண்டு உத்தரவிட்டார்.

நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு,  இளையராஜாபாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனிடையே படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும்,  அவர்களிடம்செய்த ஒப்பந்ததத்தின் அடிப்படையில் பாடல்களைப் பயன்படுத்த அதிகாரம்
இருப்பதாகவும் எக்கோ நிறுவனம் சார்பிலும் மேல்முறையீட்டு மனுதாக்கல்
செய்யப்பட்டது.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது “பாடல்கள் விற்பனைமூலம் வணிகரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்கு சொந்தம்? என்பது இறுதி தீர்புக்கு உட்பட்டது எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  தொடர்ந்து,  இசையமைப்பு என்பது க்ரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் பொருந்தாது என இளையராஜா தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

“வரிகள்,  பாடகர் அனைத்தும் சேர்ந்து தான் பாடல்,  வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை.  அப்படி இருக்கும்போது,  பாடலுக்குப் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *