முத்தபுடையான்பட்டி என்ற இடத்தில் காரை வழிமறித்து ரூ.3 லட்சம் பணம் கொள்ளை அடித்த மர்ம நபர்கள்!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் பாரதி (வயது 43). மரவியாபாரம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று நள்ளிரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு காரில் திருச்சியில் இருந்து மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முத்தபுடையான்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் காரின் முன் பகுதியில் வந்து காரை வழிமறித்து உள்ளனர்.
அப்போது பாரதி காரை நிறுத்தவே 2 மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய 4 பேரும் அவரை மிரட்டி காரில் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திருச்சி நோக்கியும், மற்ற இருவர் திண்டுக்கல் நோக்கியும் தப்பி சென்றனர். சம்மந்தப்பட்ட பகுதி இருள் சூழ்ந்த பகுதி என்பதால் அந்த இடத்தில் மக்கள் நடமாட்டம் இருக்காது.
பின்னர் பாரதி இதுதொடர்பாக மணப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் கடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.