
சென்னை:
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு நாளான இன்று மக்கள் பொழுதுபோக்கு தளங்களிலும், உணவகங்களிலும் குவிந்துள்ள நிலையில், சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை, எலியட் கடற்கரை மற்றும் பிற பொழுதுபோக்கு இடங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடி கொண்டாடினர். இதன் காரணமாகச் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. டிசம்பர் 31 நேற்று இரவு 10 மணி முதல் ஜனவரி 1 ஆம் தேதியான இன்று காலை 6 மணிவரை மேம்பாலங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில், இன்று காலை முதல் வழக்கம்போல் போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், புத்தாண்டு நாளான இன்று விடுமுறை என்பதால், ஏராளமானோர் குடும்பத்துடன் கோவில்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்குச் சென்று வருகின்றனர்.
புத்தாண்டை கொண்டாட சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுதுபோக்கு இடங்களுக்கும், மகாபலிபுரத்துக்கும் ஏராளமான மக்கள் சென்றனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை வேளச்சேரியில் புத்தாண்டை ஒட்டி உணவகங்களை நோக்கி ஏராளமான மக்கள் படையெடுத்தனர். பலரும், உணவகங்கள் அருகே சாலையிலேயே கார்களைப் பார்க்கிங் செய்ததால் பள்ளிக்கரணை – வேளச்சேரி இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



