
உங்கள் வீட்டில் தினமும் ரசம் வைப்பீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் ரசம் வைத்துச் சற்று போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை ஆந்திராவில் பிரபலமான பச்ச புலுசு ரசத்தை வையுங்கள்.
இந்த ரசத்தின் ஸ்பெஷலே, இதைச் செய்ய அடுப்பு தேவையில்லை. ஆம், இந்த ரசம் செய்வதற்கு அடுப்பு எதுவும் தேவையில்லை.
இடி உரலில் மசாலாக்களைப் போட்டுத் தட்டி, புளி நீரில் சேர்த்து, கைகளால் நன்கு பிசைந்தாலே போதும். இப்படியான ரசம், வீட்டில் கேஸ் தீர்ந்து விட்டால் அப்போது செய்வதற்கு வசதியாக இருக்கும்.
நீங்கள் ரசப் பிரியர் என்றால், ஒருமுறை இந்த ரசத்தை செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.
உங்களுக்கு ஆந்திரா ஸ்பெஷல் பச்ச புளி ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்ச புளி ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப் படித்துச் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- மிளகு – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 6
- பூண்டு – 5 பல்
- பச்சை மிளகாய் – 2
- கறிவேப்பிலை – சிறிது
- கொத்தமல்லி – சிறிது
- புளி – 1 எலுமிச்சை அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
- உப்பு – சுவைக்கேற்ப
- பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
- முதலில் இடி உரலில் 1 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம், 6 சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு, 2 பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.
- பின் ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு, அதில் நீரை ஊற்றி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- பின்பு அந்தப் புளியை கைகளால்
- நன்கு பிசைந்து, வடிகட்டித் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் தட்டி வைத்துள்ள மிளகு சீரகத்தைப் போட்டு, அதில் கரைத்து வடிகட்டி வைத்துள்ள புளி நீரை ஊற்றி, பின்
- அதில் சற்று கூடுதலாக நீரை ஊற்ற வேண்டும்.
- அதன் பின் அதில் சிறிது கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்க்க வேண்டும்.
- பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து, கைகளால் நன்கு பிசைந்து விட்டால்
சுவையான பச்ச புளி ரசம் தயார்.
