தொப்பூர்: தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களிடம் கேட்டறிந்தார்.
இதன்பின்னர் நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1989-ல் மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தை தருமபுரியில் கருணாநிதி தொடங்கி வைத்தார். கருணாநிதி விதைத்த சுய உதவிக்குழு திட்டத்தால் ஏராளமான பெண்கள் பயன்பெறுகிறார்கள். மாநிலம் முழுவதும் 4.57 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன. 14,104 குழுக்களில் 1.68 லட்சம் உறுப்பினர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். திட்டங்கள் முறையாக பயனாளிகளுக்கு சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம். கோடிக்கணக்கான மகளிருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.
தருமபுரியில் விதைத்தால் தமிழகம் முழுவதும் முளைக்கும் என்பது நம்பிக்கை. அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் உயர்கல்வி படிக்க மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் தருமபுரியில் மட்டும் 11,000-க்கும் மேலானவர்கள் பயன் அடைந்துள்ளனர். அரசின் காலை உணவு திட்டம் மூலம் 2 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுகிறார்கள். காலை உணவு திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவசிய தேவையின் அடிப்படையில் முதற்கட்டமாக 1 கோடி பேருக்கு உரிமைத்தொகை திட்டம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
