செப்டம்பர் 5ஆம் நாள் ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுவது ஏன்..?

இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் நாள் ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாள் எவ்வாறு ஆசிரியர் நாளானது என்பதைப் பற்றிப் பார்ப்போம்…

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதிக் காலம் வரை வாழ்ந்து காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் நாளையே ஆசிரியர் நாளாகக் கொண்டாடுகிறோம்.
ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்குச் சிறந்த முறையில் கற்பித்து, ஓர் உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் ஐந்தாம் நாளை ‘ஆசிரியர் நாளாகக்’ கொண்டாடுகிறோம்.
வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த  ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு நாட்களில் ஆசிரியர் நாள் கொண்டாடப்படுகிறது. கல்வியில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி தொடர்பான சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுகூரும் வகையில் ஆசிரியர் நாள் வருகிறது.
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் கற்பிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களைச் சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமான பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.
தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியைப் புனிதமாகக் கருதிப் பிற ஆசிரியர்களுக்கு எடுத்துக்காட்டாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதைத் தமது இறுதிக் காலம் வரை வாழ்ந்து காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தியவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.
அவர் பிறந்த நாளான செப்டம்பர் ஐந்தாம் ஆம் நாளை, இந்தியாவில் 1962ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் நாளாகக் கொண்டாடி வருகின்றோம். 1888ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் இராதாகிருஷ்ணன் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி.ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம்.ஏ. பட்டமும் பெற்றவர்.
சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடங்கிய அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரம் ஆகியவற்றையும், சங்கரர், ராமானுஜர், மாதவர் ஆகியோரின் போதனைகளையும் கற்றுத் தேர்ந்தார். 1918ஆம் ஆண்டு மைசூர்ப் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921இல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார்.
அதன் பிறகு 1923இல் அவரின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவ இலக்கியத்தின் ஒரு தலைசிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது. இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு அழைப்பு விடுத்தது.
பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்துக் கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிபெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ டாக்டர் ராதாகிருஷ்ணன்.
அவர் 1931ஆம் ஆண்டு ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939ஆம் ஆண்டு பெனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார். 1946இல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். 1952 முதல் 1962 வரை பத்தாண்டுகள் இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராகவும், 1962 முதல் 1967 வரை ஐந்தாண்டுகள் குடியரசுத் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *