
சென்னை:
தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குக் கூடத் திமுக அரசுக்கு மனம் இரங்கவில்லையா எனப் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பழைய ஓய்வூதியத் திட்டம், சம வேலைக்குச் சம ஊதியம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துத் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வரும் நிலையில் அவற்றை நிறைவேற்றத் தமிழக அரசு இன்று வரை முன்வர மறுக்கிறது.
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களைச் சாலையில் இறங்கி போராட அரசு தூண்டுவது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு நிர்வாகத்தின் அச்சாணியாகத் திகழ்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் தான் எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்குபவர்கள். அவர்கள் எந்தக் கவலையுமின்றி இருந்தால் தான் மாணவர்களை அறிவார்ந்தவர்களாக உருவாக்குவதில் முழுமையான கவனத்தை செலுத்த முடியும்.
ஆனால், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் அடிப்படை வாழ்வாதாரம் சார்ந்த கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல் அவர்களைப் போராட்ட நிலையிலேயே தமிழக அரசு வைத்திருக்கிறது. இது யாருக்கும் நல்லது அல்ல.
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; தற்காலிக ஆசிரியர்களுக்குப் பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பத்தாண்டுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.
அவற்றில் ஒரு கோரிக்கையைக் கூட நிறைவேற்றாத தமிழக அரசு, கடந்த ஆண்டு 2023ம் ஆண்டு டிசம்பர் 21ம் நாள் 243 என்ற எண் கொண்ட அரசாணையை பிறப்பித்து, அவர்களின் பதவி உயர்வு வாய்ப்புகளைப் பறித்தது.
ஏற்கனவே வலியுறுத்தப்பட்டு வந்த 30 கோரிக்கைகளுடன், அரசாணை எண் 243ஐ நீக்க வேண்டும் என்ற புதிய கோரிக்கையையும் சேர்த்து நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்தினார்கள்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளில் முக்கியத்துவம் இல்லாத சிலவற்றை மட்டும் தமிழக அரசு நிறைவேற்றிய நிலையில், தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், 15 கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பேச்சு நடத்துவதற்குக் கூடத் தமிழக அரசு தயாராக இல்லை. ஒரே மாதிரியான பணி செய்யும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் ஒரே ஒரு நாள் இடைவெளியில் பணியில் சேர்ந்தார்கள் என்பதற்காகப் பல ஆயிரம் ஊதியத்தை குறைத்து வழங்குகிறது தமிழக அரசு.
இது தொடர்பாகப் பல கட்டங்களாகப் போராட்டம் நடத்தப்பட்ட பிறகு இதுகுறித்து ஆசிரியர்களுடன் அரசுப் பேச்சு நடத்தியது.
பள்ளிக்கல்வித் துறை செயலாளர், இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழு 2023ம் ஆண்டு தொடக்கத்தில் அமைக்கப்பட்டது. அக்குழுவினர் ஆசிரியர் அமைப்புகளுடன் 2023ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி, அதே ஆண்டில் ஜூன் 14ம் தேதி மற்றும் அதே ஆண்டில் நவம்பர் 1ம் தேதி ஆகிய மூன்று கட்ட பேச்சு நடத்தினர்.
அதில் சிறிதும் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி, ஒராண்டுக்கும் மேலாகப் பேச்சு நடத்தப்படாத நிலையில் வரும் 4ம் தேதி அடுத்தக்கட்ட பேச்சு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்தப் பேச்சுகள் அனைத்தும் காலம் கடத்துவதற்காகத் தான் நடத்தப்படுகிறதே தவிர, ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாடு அரசுக்குச் சிறிதும் இல்லை.
ஆசிரியர்களுக்கு இடையே ஊதிய முரண்பாடு இருப்பது தெளிவாகத் தெரியும்போது நான்கு கட்ட பேச்சுகள் நடத்த எந்தத் தேவையுமில்லை.
பழைய ஓய்வூதியம், ஆசிரியர்களின் பதவி உயர்வுக்குப் பெரும் தடையாக இருக்கும் அரசாணை 243ஐ நீக்குதல், உயர்கல்வி கற்பதற்கான ஊக்கத் தொகையை மீண்டும் வழங்குதல், ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் உரிமை, அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், தகுதித் தேர்வைத் தேவையற்றதாக அறிவித்து, அதன் காரணமாக வழங்கப்படாமல் இருக்கும் தற்போதைய ஆசிரியர்களின் பதவி உயர்வை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளும் எந்தப் பேச்சுகளும் இல்லாமல் நிறைவேற்றப்பட வேண்டியவை தான்.
தமிழக அரசு நினைத்தால் தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் 15 கோரிக்கைகளையும் 15 நிமிடங்களில் நிறைவேற்றி விட முடியும். ஆனால், அதற்கான மனம் தான் தமிழக அரசுக்கு இல்லை.
வழிபடத் தகுந்தவர்கள் பட்டியலில் அன்னை, தந்தை ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ள ஆசிரியர்கள் அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்திச் சாலையில் இறங்கி போராடுவதையே தங்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பாக அரசு கருத வேண்டும்.
எனவே, தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல், தொடக்கக் கல்வி ஆசிரியர்களை மீண்டும் ஒரு போராட்டத்தை நடத்தும் சூழலுக்குத் தள்ளாமல், அவர்களின் 15 அம்சக் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


