Governor R. N. Ravi: கவர்னருக்கு நீதிபதிகள் கேள்வி!

Advertisements

புதுடில்லி: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 1ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. விசாரணையின்போது, ‘3 ஆண்டுகளாகக் கவர்னர் என்ன செய்துகொண்டிருந்தார், எந்த முடிவும் எடுக்காமல் மசோதாக்களை கவர்னர் எப்படி நிலுவையில் வைத்திருக்க முடியும்? ‘ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசுக்கும், கவர்னர் ரவிக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், கவர்னர் காலம் தாழ்த்தி வருவதாகத் தமிழக அரசு குற்றஞ்சாட்டியது. கவர்னர் ரவிக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில், ‛‛மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் அரசியல் எதிரியாக, கவர்னர் ரவி தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல், காலம் தாழ்த்தி வருகிறார். கவர்னரின் இந்த அதிகார துஷ்பிரயோகம், அரசியலமைப்புக்கு முரணானது‛‛ எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று(நவ., 20) விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், ”அனுப்பப்பட்ட மசோதாக்களை உரிய விளக்கம் இல்லாமல் கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். ஒவ்வொரு முறையும் அரசை நிர்வகிக்க உச்சநீதிமன்றத்திற்கு வந்து கொண்டிருக்க முடியாது. 8 கோடி மக்களுக்குப் பதிலளிக்கும் கடமை தங்களுக்கு உள்ளது” என்றார்.

இதனையடுத்து நீதிபதிகள், ”3 ஆண்டுகளாகக் கவர்னர் என்ன செய்துகொண்டிருந்தார்? எந்த முடிவும் எடுக்காமல் மசோதாக்களை கவர்னர் எப்படி நிலுவையில் வைத்திருக்க முடியும்? உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின் மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன்? மசோதாக்கள் தொடர்பாகக் கவர்னர் திருப்பி அனுப்பிய ஆவணங்கள் எங்கே?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். பின்னர் வழக்கு விசாரணையை வரும் டிச.,1ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில்  கேரளா சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட, 8 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக உரிய உத்தரவைப் பிறப்பிக்க வலியுறுத்திக் கேரள அரசு தாக்கல் செய்த மனு இன்று (நவ.,20) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுமீது கவர்னர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணையை நவ.,24க்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *